அச்சம் தவிர்ந்தது வாழ்வு - நல் லன்பின் விளைவது வாழ்வு மச்சினில் வாழ்பவ ரேனும் - அவர் மானத்தில் வாழ்வது வாழ்வு! உச்சி மலைவிளக் காக-உல கோங்கும் புகழ்கொண்ட தான பச்சைப் பசுந்தமிழ் நாட்டில் - தமிழ் பாய்ந்திட வாழ்வது வாழ்வு! மூதறி வுள்ளது வாழ்வு! முத்தமிழ் கற்பது வாழ்வு! காதினில் கேட்டதைக் கண்ணின் - முன் கண்டதை ஓவியம் ஆக்கும் பாதித் தொழில்செய லின்றி - உளம் பாய்ச்சும் கருத்திலும் செய்கை யாதிலும் தன்னை விளக்கும் - கலை இன்பத்தில் வாய்ப்பது வாழ்வு! ஆயிரம் சாதிகள் ஒப்பி - நரி அன்னவர் காலிடை வீழ்ந்து நாய்களைப் போல் நமக்குள்ளே - சண்டை நாளும் வளர்க்கும் மதங்கள் தூயன வாம்என்று நம்பிப் - பல தொல்லை யடைகுவ தின்றி நீஎனல் நானெனல் ஒன்றே - என்ற நெஞ்சில் விளைவது வாழ்வு! |


