சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான வீடு மீது கல்வீசி நடந்த தாக்குதலுக்கு அரசியல் காரணமாக இருக்கலாம் என்று அவருடைய ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விருகம்பாக்கத்தில் உள்ள விஜய் வீட்டில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி குடியிருந்து வருகிறார். அந்த வீட்டின் மீது சில மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வீட்டின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்தன. இந்தத் தாக்குதலைக் கண்டித்து கோவை உள்ளிட்ட பல இடங்களில் விஜய் ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். நடிகர் விஜய் வீட்டில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டங்களில் பேசிய ரசிகர் மன்றத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஏப்ரல் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகளுக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவித்திருந்தார். திரையுலகத்தின் முன்னணி நடிகர்கள் பலருக்கும் திமுக மீது கோபம் இருந்தாலும், விஜய் மட்டுமே அதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அவரது ரசிகர்களும் அவரது கருத்திற்கு மதிப்பளித்துப் பல இடங்களில் தேர்தல் பணியாற்றினர். தற்போது நடைபெற்றுள்ள தாக்குதல் இதன் தொடர்ச்சியானதாகவே இருக்கும் என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார். |


