2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறை கேடு தொடர்பான வழக்கில்
துணை குற்றப் பத்திரிகையை மத்திய புலனாய்வுத்துறை தாக் கல் செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதியின் மக ளும், திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை
உறுப்பினருமான கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில்
இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் துணைக்குற்றப்பத்திரிகை ஏப்ரல் 25க்குள் தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ உறுதியளித்தது. அதன்படி தாக்கல் செய்யப்பட்ட துணைக் குற் றப்பத்திரிகையில் கனிமொழி, கலைஞர் தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குனரான சரத்குமார் ஆகியோரின் பெயர் இடம்பெற் றுள்ளன. இந்த ஊழலில் கூட்டுச்சதியாளர் என்று சிபிஐயினால் கனிமொழி குற்றம் சாட்டப்பட் டுள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைச்சரவையில் ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத்துறையைப் பெறுவதற்கு கனிமொழி மேற்கொண்ட முயற்சிகளும் சிபிஐயினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு புதன்கிழமை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் தொலைக் காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ.200 கோடி கடன் வாங்கப்பட்டு, வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டது. இதில் எந்தச் சதியும் இல்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விளக்கத்தில் வலு இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ஒரு நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு மட் டும் கடன்தர முன்வந்தது ஏன்? என்ற கேள்வி இன்னமும் பதில் அளிக்கப்படாமலே உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணை என்பது திமுக - காங்கிரஸ் உறவு சம்பந் தப்பட்ட ஒன்றல்ல. ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு தேசத்தின் சொத்து சூறை யாடப்பட்டுள்ளது. இந்த ஊழலில் தொடர்புடை யவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். முறை கேடு செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டு, அர சின் கஜானாவுக்கு கொண்டுவரப்படவேண் டும். நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படவேண்டும். மாறாக, திமுக - காங்கிரஸ் பேரத்திற்கு கண் துடைப்பாக சிபிஐ விசாரணை மாற்றப்பட்டு விடக்கூடாது. ஏற்கெனவே திமுகவிடமிருந்து அதிக அளவு தொகுதிகளைப் பெற இந்த விசா ரணையை காங்கிரஸ் பயன்படுத்தியதாக விமர் சனம் உள்ளது. உச்சநீதிமன்றத்தின் நேரடி கண் காணிப்பில் இந்த விசாரணை நடைபெறுவதால் தான் ஓரளவுக்கு காரியங்கள் நடப்பதாக மக்கள் கருதுகின்றனர். இதில் உண்மையில்லாமல் இல்லை. லோக்பால் மசோதா குறித்து நாடுதழுவிய விவாதம் நடந்துவருகிறது. ஊழலுக்கு எதிராக மக்களின் தார்மீக கோபம் அதிகரித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் மட்டுமின்றி, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஊழல், ஆதர்ஷ் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஊழல், பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இஸ்ரோ தொடர்புடைய எஸ்-பேண்ட் ஊழல், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடர்புடைய ஊழல் என வெளிச்சத்திற்கு வந்துள்ள அனைத்து ஊழல் தொடர்பாகவும் நேர்மையான, வெளிப்படையான விசாரணை நடந்தாக வேண்டும். |


