புதுதில்லி, மே 2- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக் கெடுப்பின் போது பாஜக எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். இந்த ஊழல் மீதான நடவடிக்கை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள் கிழமை கேட்டது. 2008ம் ஆண்டு ஜூலை மாதம் நாடாளு மன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப் பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெற்றி பெற, சில உறுப்பினர்கள் பாஜக எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்தனர். இந்த லஞ்சம் தரப்பட்ட ஊழல் விவகாரம் மக்களவையிலும் வெளிச்சமிடப்பட் டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் பணம் கொடுக்க முயன்ற உறுப்பினர்கள் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ மனுத்தாக் கல் செய்திருந்தார். இம்மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம். லோதா, அப்தாப் ஆலம் ஆகி யோரைக் கொண்ட பெஞ்ச், குற்றம் சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப் பினர்கள் மீதான நடவடிக்கை நிலை குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் கேட்டது. குற்றம் இழைத்த நபர்கள் மீது நட வடிக்கை எடுக்காதது குறித்து தில்லி நகர போலீஸ் கமிஷனருக்கும் நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. 2008ம் ஆண்டு இந்தியா-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை கண்டித்து இடது சாரிகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டனர். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு, வெற்றி பெற, 3 பாஜக உறுப்பினர் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் தரப்பட்டது. இதனை அந்த உறுப் பினர்கள் மக்களவை அரங்கில் கொட்டி காங்கிரஸ் கூட்டணி அரசின் தில்லு முல்லை அம்பலப்படுத்தினார். |


